"இருக்கற பிரச்சன பத்தாதுன்னு இதுவேறயா?!!..." - 'CSKவுக்கு வந்துள்ள அடுத்த சிக்கல்'... 'பயிற்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பிராவோ பந்துவீச முடியாததற்கான காரணம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் விளக்கியுள்ளார்.
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவை என்ற நிலையில், வழக்கமாக டெத் ஓவரில் பந்து வீசும் பிராவோ வராமல் திடீரென ஜடேஜா பந்து வீசியது ரசிகர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல் 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார். பிராவோவுக்கு இன்னும் ஒரு ஓவர் மிச்சம் இருந்த நிலையிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், "துரதிருஷ்டமாக பிராவோவுக்கு வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் காயம் ஏற்பட்டதாலேயே அவர் ஓய்வறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, கடைசி ஓவரில் அவரால் பந்துவீச முடியவில்லை. பிராவோ இயல்பாகவே டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட். பல போட்டிகளில் கடைசி ஓவரில் பந்துவீசி அவர் சவால்களை வென்றுள்ளார். அதனால் ஜடேஜாவை கடைசி ஓவர் வீச வைக்க வேண்டும் என நினைக்கவில்லை.
ஆனால், பிராவோவுக்கு காயம் ஏற்பட்டு அவர் பந்துவீச முடியாத காரணத்தால் வேறு வழி இன்றியே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றபடி எங்களுடைய ஆட்டம், செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. பிராவோவுக்கு ஏற்பட்ட காயத்தால்தான் அவரால் பீல்டிங் செய்யவும் முடியவில்லை, கடைசி ஓவரையும் வீச முடியவில்லை. இது பிராவோவுக்கே சற்று வேதனையாகத்தான் இருந்தது. தன்னால் கடைசி ஓவர் பந்துவீச முடியவில்லை என வருத்தப்பட்டார். பிராவோவுக்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் சரியாகலாம் அல்லது அவர் 2 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியது வரலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாகவே காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் முதல் 3 போட்டிகளில் பிராவோ பங்கேற்காததால் லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் போன்றோர் பயன்படுத்தப்பட்டாலும் அது ஒத்துவராததால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து பிராவோ அணியில் இடம்பெற்று வருகிறார். இதையடுத்து தற்போது பிராவோவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே ரெய்னா, ஹர்பஜன் இருவரும் இல்லாததால் இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர் இருவரில் ஒருவரை அடுத்தப்போட்டியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.