பேஸ்புக் காதலியை நேரில் பார்க்க ‘சர்ப்ரைஸ்’ கிப்ட்டுடன் போன இளைஞர்.. இப்டி நடக்கும்ன்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. காத்திருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை பார்க்க சென்ற நபருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளது.
திருச்சியை சேர்ந்த 30 வயதான இளைஞர் எப்போதும் பேஸ்புக்கில் முழ்கி கிடப்பதை பொழுதுபோக்காக வைத்திருந்துள்ளார். அப்போது திருவாரூரை சேர்ந்த அனுசியா என்ற பெண்ணின் பேஸ்புக் பக்கத்தில் அவரது அழகான போட்டோவை பார்த்ததும் பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். உடனே எதிர்முனையில் இருந்து அவரது ரெக்வெஸ்ட் அக்செப்ட் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த பெண்ணின் பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த இளைஞர் பேசியுள்ளார். அதில் பேசிய பெண், காதல் வசனங்களை பேசி இளைஞரை கவர்ந்துள்ளார். இதனால் தனக்கு திருமணமான தகவலையும் மறைத்து அப்பெண்ணுடன் இளைஞர் பழக ஆரம்பித்துள்ளார்.
இதன்பின் அப்பெண் அந்த இளைஞரிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்க ஆரம்பித்துள்ளார். செல்போனிலேயே காதலை வளர்த்த இளைஞரும், அந்த பெண் கேட்டபோதெல்லாம் பணம் அனுப்பியுள்ளார். இப்படியாக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது பேஸ்புக் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அந்த இளைஞர் நினைத்துள்ளார். அதன்படி பரிசுப் பொருட்களுடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுத்தெருவில் உள்ள அனுசியா வீட்டுக்கு இளைஞர் சென்றுள்ளார். அங்கே சென்று பார்த்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
தன்னுடன் இவ்வளவு நாளாக பேஸ்புக்கில் பேசியது இளம்பெண் இல்லை, 40 வயது நடுத்தர பெண் அனுசியா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த போட்டோ பக்கத்துவீட்டு பெண்ணுடையது என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக பக்கத்து வீட்டில் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில் அனுசியாவின் சொந்த தம்பியான கவிதனே அக்காவை பேஸ்புக்கில் காதலிக்க வைத்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதற்கு அனுசியாவின் கணவர் அய்யப்பனும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேபோல் அவர்கள் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளனர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இருக்க ரகசியமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பெண் தேடினால், போலிக் கணக்குடன் மோசடி கும்பல் பணம் பறிக்க தயாராக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நபர்களை நம்பி ஏமார வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.