மீண்டும் ஒரு சாத்தான்குளமா..? சிறை கைதி திடீர் மரணம்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார் என கூறி, கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (39). இவர் முந்திரி தொழில் செய்து வந்தார். இதற்காக நெய்வேலி வடக்குத்தில் தனது மனைவி பிரேமா (34) மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் செல்வமுருனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வமுருகன் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை அடுத்து கடந்த 2ம் தேதி செல்வமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிறைக் காவலர்கள் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வ முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து செல்வமுருகன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அவர்களது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் செல்வமுருகன் உயிரிழந்துவிட்டார் என கூறி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, செல்வமுருகனை தாக்கிய நெய்வேலி போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என போராட்டத்தில் இறங்கினர்.
தகவலறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மற்றும் தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் விருத்தாசலம் கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் போலீசார் அடித்ததால் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது விருத்தாசலத்தில் அதுபோல் ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.