'எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி நடந்த சோதனை'... 'திடீரென கதறி அழுத மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றதது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டார்கள். கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டு அதற்கு பின்னரே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.
இதற்கிடையே திருவள்ளூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு எழுத புரசைவாக்கத்தை சேர்ந்த மோனிகா என்ற மாணவி வந்துள்ளார். அப்போது தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பாக அடையாள அட்டை உட்பட அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது தான் மாணவி அசல் அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்தது சோதனையில் தெரியவந்தது. இதை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி கதறி அழுதார்.
அந்த நேரம் அந்த தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர் அசல் அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்டு வந்ததை கூறினார். உடனே அந்த மாணவியை தேற்றிய அவர், நீ கண்டிப்பாக தேர்வு எழுவாய், அதற்கு நாங்கள் பொறுப்பு என கூறினார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகேஷ்வரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாணவியின் தாயாரை அழைத்துச் சென்று அசல் அடையாள அட்டையை எடுத்து கொண்டு தக்க நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்தார்.
அசல் அடையாள அட்டை வந்ததும் நிம்மதி அடைந்த மாணவி மோனிகா மகிழ்ச்சியாக தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என தவித்த மாணவிக்கு தக்க நேரத்தில் உதவிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவலர் மகேஷ்வரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.