'கல்யாணம் ஆன தன் மகளுக்கு...' 'மணமகன்' தேவை விளம்பரம்...! 'யாரு' இந்த வேலைய பார்த்தது...? - கடைசியில் தெரிய வந்த 'அதிர்ச்சி' உண்மை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மனைவி விவாகரத்து கொடுக்காத விரக்தியில் செய்த சம்பவம் அவரை சிறை வாசலில் நிற்க வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் என்பவற்றின் மகள் 32 வயதான ஜான்சி. சாப்ட்வேர் என்ஜினீயரான ஜான்சிக்கும், திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த 34 வயதான ஓம்குமாருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அதன் பின் சில மாதங்களிலேயே ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்த காரணத்தால் ஓம்குமார் மற்றும் ஜான்சி இருவருமே அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஓம்குமார் மற்றும் ஜான்சிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது, அதோடு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் அமெரிக்காவில் தன் குழந்தை மற்றும் மனைவியை விட்டுவிட்டு சொந்த ஊரான திருவள்ளூரை அடுத்த வெள்ளியூருக்கு வந்துள்ளார். தற்போது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு வந்த ஓம்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதோடு ஊரில் பால் வியாபாரமும் செய்து வருகிறார். மனைவியை விட்டு பிரிந்து மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் ஒம்குமார் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள சப்-கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஓம்குமார் பிரபல திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மணமகன் தேவை என தகவல் தெரிவித்து விளம்பரம் கொடுத்ததோடு ஜான்சியின் தந்தை பத்மநாபன் நம்பரையும் கொடுத்துள்ளார். ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து ஜான்சியை பிடித்து போய் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பத்மநாபனை பலர் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன் தன் பெண்ணின் சம்மதம் இல்லாமல் மருமகன் செய்த காரியத்தை போலீசில் புகாராக அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை ஒம்குமாரை விசாரிக்கையில் தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் விளம்பரம் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லில்லி, ஓம்குமார் தான் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டார் என நிருபித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.