‘அவங்க கோர முகம் கொஞ்சமும் மாறல’!.. ஆப்கான் இளம்பெண்ணுக்கு நடந்த சொல்ல முடியாத கொடுமை.. பெண் செய்தியாளர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் கோர முகம் மாறவில்லை என ஆப்கானில் இருந்து தப்பிய பெண் செய்தியாளர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்று பலரும் மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனிடையே ஆப்கான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியதும் தாலிபான்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிமை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
ஆனால் தாலிபான்கள் மாறவில்லை என்றும், அவர்களது கோர முகம் அப்படியேதான் உள்ளதாகவும் ஆப்கானில் இருந்து தப்பிய தி டல்லாஸ் மார்னிங் நியூஸ் ஊடகத்தின் பெண் செய்தியாளர் ஹோலி மெக்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரையில், ‘கடந்த வாரம் தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்ட பிறகு தாலிபான்கள் வீடு வீடாக சென்று 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்டதாக என் தோழி ஃபரிஹா கூறினாள்’ என ஹோலி மெக்கே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ஒரு தந்தையிடம் அவரது மகள்களையும், மனைவியையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு தாலிபான்கள் கூறியுள்ளனர். அப்போது முல்லா என்ற தாலிபான், 21 வயது இளம்பெண் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்து தர வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் திருமணம் செய்து அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு அப்பெண்ணின் தந்தைக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
தனது மகளை திருமணம் செய்துகொண்ட தாலிபான் மட்டுமல்லாமல், ஒவ்வொரு இரவும் நான்கு தாலிபான்களால் தனது மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளார். உடனே இதுகுறித்து மாவட்ட ஆளுநரிடம் அந்த தந்தை முறையிட்டார். ஆனால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என அவர்கள் கூறி அனுப்பியுள்ளனர். இந்த கொடுமைக்கு பிறகு அந்த தந்தை தனது மகள்களுடன் தலைமறைவாகிவிட்டார்’ என தோழி ஃபரிஹா தன்னிடம் கூறியதாக ஹோலி மெக்கே குறிப்பிட்டுள்ளார்.
தாலிபான்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்ளும் இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கான ஆப்கான் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும், ‘தாலிபான்கள் தங்களது நடத்தையை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களது கோர முகம் கொஞ்சமும் மாறவில்லை. எப்போதும் அவர்கள் மாற மாட்டார்கள்’ என செய்தியாளர் ஹோலி மெக்கே கூறியுள்ளார். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் என தாலிபான்கள் கூறிய நிலையில், பெண் செய்தியாளரின் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.