மனைவியை பிரிகிறார்...! 'விவாகரத்து' எவ்வளவு மோசமான வார்த்தை இல்ல...? '10 வருஷ திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது...' - இன்ஸ்டாகிராமில் உருக்கம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிகர் தவான், அவரின் மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 10 வருடங்களாக நீடித்து வந்த அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
ஷிகர் தவானுடன் விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஷிகர் தவான் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆயிஷா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவார். ஆயிஷா ஏற்கனவே திருமணமானவர். இரு பெண் குழந்தைகளுக்கு தாயான அவர் முதல் கணவரை பிரிந்து 2012-ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் 'சோராவர்' எனும் மகன் உள்ளார்.
முதலில் ஆயிஷாவை திருமணம் செய்ய முடிவு எடுத்தபோது தவானின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தவான் அவர்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார். ஆயிஷாவின் குடும்பத்தினர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள். பின்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கின்றனர்.
விவாகரத்து குறித்து, தவானின் மனைவி ஆயிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் “முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயமாக இருந்தது. நான் மிகவும் தவறான காரியத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன். சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாகவும் உணர்ந்தேன். என்னுடைய அப்பா அம்மாவையும் கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதியை வழங்கியதாக எண்ணினேன். 'விவாகரத்து' உண்மையிலேயே ஒரு மோசமான வார்த்தை தான்.
இப்போது மீண்டும் விவாகரத்து செய்கிறேன். இது மிகவும் கொடூரமானது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை புரிந்துக் கொள்கிறேன். விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறரிடம் அடகு வைக்காமல் என் சுதந்திரத்தை தேர்ந்தெடுப்பது ஆகும்.
எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற படிப்பினையை விவாகரத்து கற்றுத் தருகிறது. இப்போது முன்பைவிட வலிமையான பெண்ணாக உணர்கிறேன். இதைப் படிக்கும் யாரேனும் உறவை முறிக்க முடியாமல் பயப்படுகிறீர்களா? என்று எனக்கு இன்பாக்ஸில் மெசேஜ் அனுப்புங்கள்" என அவர் மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.