"எங்கள பத்தி விஷமத்தனமான பிரச்சாரம் பண்றாங்க"!.. திடீரென ட்விஸ்ட் கொடுத்த தாலிபான்கள்!.. திரைமறைவில் நடப்பது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாயப்படுத்தி தாலிபான்கள் திருமணம் செய்துகொள்வதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னணியில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் இன்னும் 3 வாரங்களில் மொத்தமாக நாடு திரும்ப உள்ளன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக கானி, முக்கிய கிழக்கு நகரமான ஜலாலாபாத், தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத், காபூலின் தெற்குப் பகுதியில் உள்ள லோகர் என நாட்டின் முக்கிய மாகாணங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து தாலிபான்கள் முன்னேறிவரும் நிலையில், சமீபத்தில் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும், இதன் முடிவு சில நாட்களில் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தாங்கள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெண்களை தாலிபான்கள் குழு கட்டாய திருமணம் செய்துவருவதாக ஒரு செய்தி வெளியானது. தாலிபான்கள், திருமணமாகாத பெண்களை தங்கள் குழுவில் உள்ள வீரர்களுக்கு மனைவிகளாக கட்டாயப்படுத்தி மாற்றி வருகின்றனர் என்றும், சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பிடிபட்ட அரசுப் படை வீரர்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக, கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் முன் தோன்றும் தாலிபான்கள், நாட்டின் மிகப்பெரிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், தாலிபான்கள் வெற்றிபெற வேண்டும் என்று மக்களை கோஷம் போடவைப்பதாகவும், கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல்களையும் அரங்கேற்றுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தாலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "தாலிபான்கள் இளம் பெண்களை படை வீரர்களுக்கு திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்துகிறது என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது. இது ஒரு விஷமப் பிரச்சாரம். ஆப்கானிஸ்தான் அரசு அடிப்படை ஆதாரமற்ற இந்த தீய பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.
மேலும், முஜாஹிதீன்கள் மக்களைக் கொல்கிறார்கள், கைதிகளையும் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் கொன்றார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பரப்பி விடுகிறார்கள். அனைத்தும் அடிப்படையற்றவை" என்று குறிப்பிட்டுள்ளார்.