'சரணடைந்த மெயின் குற்றவாளி'.. 'திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் பரபரப்பு திருப்பம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 10, 2019 05:17 PM

லலிதா ஜீவல்லரி கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருவாரூர் முருகன் சரணடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

thieves actions in CCTV footage in jewellery robbery

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் மேற்குப்பக்க சுவரினை மர்ம நபர்கள் துளையிட்டு 13 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுடைய தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளை அடித்த விவகாரத்தில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் சிலர் பிடிபட்டனர்.

சிலர் தாமாகவே முன்வந்து சரணடைந்தனர். எனினும் முக்கிய குற்றவாளியான திருவாரூர் சீராத் தோப்பைச் சேர்ந்த முருகன், திருடிய நகைகளுடன் துணை நடிகை ஒருவருடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைத் தேடும் படலத்தில் தனிப்படைகள் கொண்டு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மணிகண்டன், முருகனின் அக்கா மகன் சுரேஷ், நகைகளை உருக்கித் தந்த தாஸ் உள்ளிட்ட 11 பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், முருகன் கொள்ளையடித்த நகைகளை நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த தாஸ் உருக்கித் தந்து வந்ததும், பாலமுருகன் புரொடொக்‌ஷன்ஸ் மற்றும் என்.ராஜம்மாள் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட பெயர்களில் முருகன் சினிமா நிறுவனங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே லலிதா ஜுவல்லர்ஸில் நடந்த கொள்ளை சம்பவத்தை சிசிடிவியில் ஆய்வு செய்தபோது, முதலில் சுரேஷ் தனக்கு கிடைத்த நகைகளை எடுத்து பைகளில் போடுவதும், ஆனால் அதைப் பார்த்த முருகன்,  ‘பெரிய நகைங்கள மொதல்ல எடுத்து வை’ என சைகை காட்டி சொல்லி கண்டிப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், லலிதா ஜீவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், சுரேஷ், முரளி ஆகியவர்கள் சிக்கிய பிறகு, கடைசியாக முக்கியக் குற்றவாளியும், இந்த கொள்ளைச் சம்பவத்தின் தலைவராகவும் பார்க்கப்படும் திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த பிரபல கொள்ளைக்காரன் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகவும், அவரது உறவினர்கள் திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Tags : #JEWELLERY #CCTVFOOTAGE #ROBBERY