"மதுப்பிரியர்களோடு மதுப்பிரியராக டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற கொரோனா நோயாளி!".. கிடுகிடுக்கவைத்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 10, 2020 07:16 AM

தமிழகத்தில் தேனி மாவட்டத்தை பொருத்தவரை வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வரும் நபர்களால் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் அம்மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் டாஸ்மாக் சென்று வரிசையில் நின்று மது வாங்கியதாக வெளியான தகவல் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Theni corona patient bought liquor by standing in tasmac with others

முன்னதாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி ஏற்றிச் சென்றதாக தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள கோட்டார்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த  லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து அவரது டிராவல் ஹிஸ்டரி சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. ஆம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த நபர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகே உள்ள கெங்குவார்ப்பட்டி கிராமத்தில் மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு வரிசையில் நின்றிருந்த மது பிரியர்களோடு மதுப்பிரியராக இவரும் வரிசையில் நின்று மது வாங்கியதோடு, அங்கு அவருடன் வந்திருந்த அவரது சக மது அருந்தும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுமுள்ளதாக தகவல்கள் தெரியவந்தன. இதனையடுத்து உடனடியாக கெங்குவார்ப்பட்டி மதுக்கடைக்கு இவர் வந்த அதே நேரத்தில் இவருடன் வரிசையில் நின்று வாங்கியவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு புறம் கோட்டார்ப்பட்டி கிராமம் முழுவதையும் சுகாதாரத்துறை தமது கண்காணிப்பு வளையத்துக்குள் கீழே கொண்டு வந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடுகள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சாலையில் குளோரின் பவுடரும் தூவப்பட்டும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் தீவிரமடைந்து வரும்நிலையில் கிராமத்தில் முகாமிட்டு இருக்கிற சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று கிராமத்தினரை பரிசோதித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கெங்குவார்ப்பட்டி டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் மது வாங்குவதற்கு வந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அதேசமயம் வீரபாண்டி சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கை 57 ஆக உள்ளது.  எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 14 பேர் தேனி அரசு மருத்துவமனைல் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.