'போதை இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண் புகார்...' 'டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு சென்றதால்...' 'மாலை வரச் சொன்ன போலீசார்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | May 08, 2020 07:43 AM

கரூர் மாவட்டத்தில் மது போதையில் தன்னையும், தன் குழந்தைகளையும் அடித்து ஆற்றில் தள்ளியதாக டாஸ்மாக் கடையின் முன் பெண் ஒருவர் கண்ணீருடன் போராடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

women alleges drunken youths sexually harassed in karur

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் அருகே உள்ள மலையப்ப நகரை சேர்ந்த கீதா என்பவர் தனது 4 குழந்தைகளுடன் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக மதுபோதையில் வந்த 5 இளைஞர்களில் 2 பேர் ஆற்றினுள் குளிப்பது போல் கீதாவிடம் சென்று அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதையடுத்து கீதா அவர்களை திட்டி அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். இதனால் கோபமடைந்த போதை ஆசாமிகள், கீதா மற்றும் குழந்தைகளை காலால் உதைத்தும் அடித்தும் தாக்கி தண்ணீரில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, ஆத்திரமடைந்த அந்த பெண், தனதுகுழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, நேரடியாக மதுபானக் கடைக்கு வந்து ’நீங்கள் மது விற்பதால் தான் பெண்களுக்கு நிம்மதியே இல்லை என கண்ணீருடன் கூறி அழுதார். மதுவை விற்காதீர்கள் உடனடியாக கடைய மூடுங்க’ என்று கடையின் முன்பு நின்று சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, காவல் நிலையத்தில் புகாரளிக்கக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பெண், குளித்தலை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தபோது, காவலர்கள் அனைவரும் மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு பணிகளுக்கு சென்றுள்ளதால் மாலை நேரத்தில் வா அப்போது விசாரித்துக் கொள்ளலாம் என்று புகார் மனுவை வாங்கி விட்டு அந்த பெண்ணை அனுப்பிவைத்து உள்ளனர்.

இரண்டு பேர் போதையில் தாக்கியதால் வயிற்றுவலி ஏற்படவே, உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.