'இனிமே எங்க வீடு தான் ஸ்கூலு' ... 'வாட்ஸ்அப் தான் க்ளாஸ் ரூம்' ... கலக்கும் புதுக்கோட்டை டீச்சர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் மாதம் இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. விடுமுறை தினத்தையொட்டி பல ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வகுப்புகள் நடத்தி வரும் நிலையில் அந்த வழியை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஒருவரும் கையில் எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் தொழுவங்காடு ஆசிரியையான ராக்கம்மாள், 'தொழுவங்காடு நூற்றாண்டு பள்ளி' என்ற வாட்ஸ்அப் குரூப் ஒன்றை தொடங்கி, தனது மாணவர்களுக்கு தினமும் வீட்டுப்பாடம் கொடுத்து வருகிறார். மாணவர்களும் பெற்றோர்கள் முன்னிலையில் நோட்டுகளை பார்க்காமல் எழுதி போட்டோ எடுத்து குரூப்பில் அனுப்புகின்றனர். அதனை திருத்தம் செய்து மீண்டும் போட்டோ எடுத்து அனுப்புகிறார் ராக்கம்மாள்.
இதுகுறித்து ஆசிரியை ராக்கம்மாள் கூறுகையில், 'ஒரு நாளைக்கு மாணவர்களை இரண்டு மணி நேரம் மட்டும் தான் படிக்க வைக்கிறேன். அதிக நேரம் எழுத்துப்பயிற்சி கொடுத்து வருகிறேன். பெற்றோர்களின் பங்களிப்பு இல்லாமல் இது நிச்சயம் சாத்தியமில்லை. அவர்களின் ஒத்துழைப்பு தான் இது செயல்பட மிகப் பெரிய காரணம். வாட்ஸ்அப்பில் இல்லாத பெற்றோர்களிடம் அழைத்து பேசி பிள்ளைகள் படிப்பதை உறுதி செய்து கொள்கிறேன்' என்கிறார்.