கொரோனா எதிரொலி... பழைய மிக்சி, கிரைண்டருக்கு பதிலாக புதிது!... ஊரடங்கில் வித்தியாசமான உதவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஆயிரம் விளக்கில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு பழைய மிக்சி, கிரைண்டர், குக்கர் ஆகியவற்றை வாங்கிவிட்டு புதிதாக வழங்குகிறது.

ஊரடங்கில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவைகள் பல இருக்கும். ஆனால் எல்லா தேவைகளையும், எல்லோராலும் பூர்த்தி செய்ய முடியாது. அதே நேரத்தில் யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவி செய்வது பாராட்டத்தக்கது.
அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு பழைய மிக்சி, கிரைண்டர், குக்கர் ஆகியவற்றை வாங்கிவிட்டு புதிதாக வழங்குகிறது.
இதுதொடர்பாக தொடர்பு எண்ணையும் வெளியிட்டு தகுதியானவர்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது. வித்தியாசமான இந்த உதவி பற்றி இன்சோ உதவும் கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் பிரகாஷ் கூறியதாவது:-
அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ஓரளவு எல்லோரும் வாங்கி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இம்மாதிரியான காப்பகங்களில் சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர் போன்றவை நாள் பட்டவையாக இருக்கலாம். இப்போது பழுதாகி இருக்கலாம்.
ஊரடங்கு காரணமாக, கடைகள் மூடப்பட்டு விட்டதால் அவர்களால் அதை சரிசெய்ய முடியாது. எனவே, நாம் இப்படி உதவலாம் என்று முடிவு செய்து பழைய கிரைண்டர், மிக்சிகளை வாங்கி விட்டு புதிதாக வழங்குகிறோம். இதுவரை 250 பேருக்கு வழங்கி இருக்கிறோம். இன்னும் கொடுக்க தாயராக இருக்கிறோம். தேவைப்படுபவர்கள் 9381280808 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
