'கொரோனாவின் பிடியில் மீண்டும் சீனா!'... புதிதாக 108 பாதிப்பு... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 13, 2020 02:13 PM

சீனாவில் புதிதாக 108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

china faces new 108 positive cases a record 6 week high

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு, சீனாவில் வசந்தம் வீசத் தொடங்கியது. உகான் நகரில் 76 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அது நீக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள், "சீனாவில் கடந்த வாரத்தில் மட்டும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 98 பேர் வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள். ஹுபே மாகாணத்தில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் சீனாவில் இதுவரை 3,341 பேர் பலியாகியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு, கொரோனா தொற்று 108 ஆக அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்கு இதுவரை 82,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கு 14 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.