பிரச்சாரத்தில் சோடா பாட்டில் வீச்சு... பலத்த காயமடைந்த நிர்வாகி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 01, 2019 06:36 PM

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க.வினர் மீது, சோடா பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

soda bottle thrown on admk party members in ramanathapuram

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில், அ.தி.மு.க. கூட்டணியினர் வாக்குச் சேகரிக்க சென்றனர். அப்போது அவர்கள்மீது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர், சோடா பாட்டில் வீசி தாக்கியதால், அங்கே பெரும் பரபரப்பு உண்டானது.  இந்தத் தாக்குதலில் திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் உடையத்தேவர் பலத்த காயமடைந்து உள்ளதாக தெரிகிறது.

பெரியபட்டினத்தில், அமைச்சர் மணிகண்டன் மற்றும் எம்.பி. அன்வர் ராஜா தலைமையில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, வாக்கு சேகரிக்க சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

சோடாபாட்டில் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தங்கள் கூட்டணிக்கு எதிரானவர்களே இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர். அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ADMK #BJP #SODABOTTLE #THROWN #LOKSABHAELECTION2019 #RAMANATHAPURAM