“லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து”..‘நேர்மையாக வாழ்ந்த இன்ஸ்பெக்டர்’.. சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Mar 19, 2019 05:54 PM
மூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை செய்ய பணமில்லாமல் நேர்மையான இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள சிங்கம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளரான ராமையா. இவருக்கு சரஸ்வதி என்கிற மனைவியும் நித்தீஷ் என்கிற 18 வயதுடைய மகனும் உள்ளனர். நித்தீஷ் சென்னை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இன்ஸ்பெக்டர் ராமையா தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணியாற்றியுள்ளார். நேர்மையான அதிகாரி என்பதால் பல இடங்களுக்கு பணி மாறுதல் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னைக்கு மாறுதலானார்.
சென்னை ஐ.சி.எப் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்று, கீழ்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் 8 ம் தேதி பணியில் இருந்த போது தலைவலியால் அவதிப்பட்ட அவர் விடுப்பு எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து வலி அதிகமானதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இன்ஸ்பெக்டர் ராமையாவின் முளைக்கும் செல்லும் நரம்பில் கோளாறு இருப்பதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். புதிய இடத்துக்கு மாறுதலானதால் பணம் ஏற்பாடு செய்வதில் குடும்பத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று(18.03.2019) சிகிச்சை பலனின்றி இன்ஸ்பெக்டர் ராமையா உயிரிழந்தார். சிகிச்சைக்கு போதிய பணவசதி இல்லாமல் நேர்மையான காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.