'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 13, 2019 03:55 PM
சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே, 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுவது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘இஐஆர் 21’ என்ற நீராவி ரயில் இன்ஜின் இந்தியாவிலியேயே மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். கடந்த 1855-ம் ஆண்டு தயாரான இந்த இன்ஜின்,இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்தது. அதன் பின்னர், கடந்த 1909-ம் ஆண்டு தனது பணியை முடித்து கொண்டு, ஜமால்பூர் ரயில்வே அருங்காட்சியகத்தில் ஓய்வெடுத்தது. இந்நிலையில் 101 ஆண்டுகளுக்கு பின்பு சென்னைக்கு வந்த இன்ஜின் புதுபொலிவு பெற்றது. இந்த இன்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக ஆண்டுதோறும் ஒன்றிரண்டு முறை இயக்கப்பட்டு வருகிறது.
பழைய ‘ஹாரன்’ சத்தத்துடன் புகையை வெளியேற்றியபடி மெதுவாக செல்லும் இதன் அழகை காண சென்னை மக்கள் பலரும் ஆர்வமாக வருவார்கள். இந்த ரயிலில் ஓரிரு முறை மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த சிறப்பு ரயிலில், 40 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் ரயில் பெட்டியுடன் இணைக்கப்பட்டு, சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நாளை (14-ம் தேதி) 2 முறை இயக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு கோடம்பாக்கம் சென்றடையும். அடுத்ததாக எழும்பூரில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு கோடம்பாக்கம் செல்லும்.
இந்த பாரம்பரிய இன்ஜின் ரயிலில் ஒருமுறை பயணம் செய்ய சிறுவர்களுக்கு ரூ.300, பெரியவர்களுக்கு ரூ.500 எனவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.1,000 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே சிறப்பு ரயிலுக்காக டிக்கெட் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழங்கப்படும் எனவும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.