படிக்கலைன்னு திட்டிய அப்பா.. வீட்டைவிட்டு ஓடிப்போன மகன்.. ஒன்றரை வருஷம் கழிச்சு நடந்த அதிசயம்.. வாழ்க்கையை மாற்றிய ஆதார்கார்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்படிக்கவில்லை என்று அப்பா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் விறகு வியாபாரம் செய்துவருகிறார். இவருடைய மகன் மாதேஷ் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அறிவழகன் தனது மகனை சரியாக படிக்கவில்லை என அவ்வப்போது கண்டித்து வந்திருக்கிறார். இதனிடையே, படிக்கவில்லை என அப்பா திட்டியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை விட்டே வெளியேறியிருக்கிறார் மாதேஷ். இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன் தனது மகனை தேடியலைந்திருக்கிறார். ஆனால் அவரால் மாதேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.
புகார்
இதனையடுத்து, திருவாரூர் காவல்நிலையத்தில் மாதேஷின் பெற்றோர் மகனை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பல்வேறு வகையில், மாதேஷை தேடிவந்தனர். ஆனால், பலன் கிடைக்கவில்லை. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவழகன் தனது வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது மாதேஷுக்கு புது ஆதார் கார்டு வந்திருக்கிறது. இதனால் குழம்பிப்போன அறிவழகன் காவல்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து சொல்லியிருக்கிறார்.
ஆதார் கார்டு
இதனால் பரபரப்பான அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அதன் பலனாக மாதேஷ், மும்பையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அங்கே, மண்டபங்களை அலங்கரிக்கும் பணியில் மாதேஷ் ஈடுபட்டு வந்திருக்கிறார். புது ஆதார் கார்டு வேண்டி மாதேஷ் விண்ணப்பிக்க, அவருக்கு ஏற்கனவே ஆதார் இருந்ததால் உண்மையான முகவரிக்கு கார்டு வந்திருக்கிறது. இதனையடுத்து அறிவழகனை அழைத்துக்கொண்டு போலீசார் மும்பை சென்றிருக்கின்றனர். மும்பையில் காவல்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து தனது மகனை கண்டுபிடித்திருக்கிறார் அறிவழகன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை கண்ட அறிவழகன் கண்கலங்கியபடி அவரை கட்டியணைத்து தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார். இதனை கண்ட அதிகாரிகளும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிப்போன மகனை மிகுந்த முயற்சிக்கு பிறகு தந்தை கண்டுபிடித்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.