ஏழு வருசமா ஆன்லைன் மூலம் லவ்!!.. இனிமே காதலன் கூட வாழலாம்'ன்னு முடிவு எடுத்து கிளம்பிய பெண்ணுக்கு சில மாசத்துல நேர்ந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏழு வருடங்கள் இணையம் வழியாக காதலித்து வந்த இளம்பெண்ணிற்கு கடைசியில் நேர்ந்த சம்பவம், கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஆஷ்லீ வேட்ஸ்வொர்த் (Ashley Wadsworth).
இவருக்கு பிரிட்டனை சேர்ந்த ஜாக் செப்பில் (Jack Sepple) என்ற வாலிபருடன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரை ஒருவர் ஆன்லைன் மூலம் பேசியே காதல் வளர்க்கவும் தொடங்கி உள்ளனர். இப்படியே சமூக வலைத்தளம் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ஜாக் மற்றும் ஆஷ்லீ ஆகியோர் காதல் வளர்த்து வந்த நிலையில், ஒரு துணிச்சலான முடிவையும் இளம்பெண் ஆஷ்லீ எடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஜாக்குடன் வாழ வேண்டுமென முடிவு எடுத்த ஆஷ்லீ, கனடாவில் இருந்து கிளம்பி பிரிட்டனுக்கும் சென்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில் ஆஷ்லீக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. தான் 7 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் அப்படியே வேறொரு பரிமாணத்தில் இருப்பதை அறிந்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், வேறு பெண்களையும் ஜாக் காதலிப்பதை ஆஷ்லீ அறிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட சொந்த நாடான கனடாவுக்கு திரும்பவும் ஆஷ்லீ முடிவு செய்துள்ளார். தனது தாயிடம் தெரிவித்து விட்டு, விமானம் ஏறவும் ஆஷ்லீ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஆஷ்லீயின் பெற்றோர்கள் அவரை பிரிட்டன் போக வேண்டாம் என வலியுறுத்திய பின்னரும் அதனை மீறி காதலன் ஜாக்கை பார்க்க வந்த ஆஷ்லீ கொஞ்ச நாளிலேயே நொந்து நூலாகி விட்டார். மறுபக்கம், ஆஷ்லீ போய் விட்டால் தனது கட்டுப்பாட்டில் அவர் இருக்க மாட்டார் என்பதை உணர்ந்த ஜாக், அவரை கொலை செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இதுகுறித்து விசாரித்து ஜாக்கிற்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இத்தனை மாதங்கள் கழித்து மகளை கொலை செய்த வாலிபருக்கு தண்டனை கிடைத்துள்ள நிலையில், ஆஷ்லீயின் தாயார் சில உருக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "பாவம் என் மகள். அவன் கையால் என்ன பாடுபட்டிருப்பாள். எவ்வளவு பயந்து நடுங்கி இருப்பாள். என் மகள் கடைசியாக என்ன பேசினாளோ, அவள் எங்களை தேடினாளோ என இந்த கேள்விகளுக்கு பதில் இரண்டு பேருக்கு தான் தெரியும். அதில் ஒருவர் இறந்து விட்டார். இனி ஒருவரிடம் கேட்டும் பயனில்லை" என கண்ணீர் மல்க ஆஷ்லீயின் தாயார் தெரிவித்துள்ளார்.
7 வருடங்கள் ஆன்லைன் மூலம் காதலித்து வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம், பலரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.