"சாகுறதுக்கு முன்னாடி ஒருதடவை அவனை பார்த்துடனும்னு நெனச்சேன்".. ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன்.. 25 வருஷத்துக்கு அப்பறம் நடந்த அதிசயம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை சேர்ந்த தாய் ஒருவர் 25 வருடங்கள் கழித்து தனது மகனுடன் இணைந்திருக்கிறார். இதனால் அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

பிரிவு
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருக்காச்சல் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு ராம் பாய் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இருவரும் காதலை வெளிப்படுத்த திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கோவிந்த் என்ற மகன் இருந்த நிலையில், கேரளா திரும்பியிருக்கிறார்கள் இருவரும். அப்போது கீதாவை பிரிந்த ராம் மகன் கோவிந்தையும் தூக்கிக்கொண்டு சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
தனிமை
அப்போது கோவிந்திற்கு வயது ஒன்றரை ஆகும். கர்ப்பமாக இருந்த நிலையில், கணவனும் மகனும் பிரிந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார் கீதா. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இருவர் பற்றியும் தகவல்கள் கிடைக்காததால் கீதா மன விரக்தியுடன் இருந்திருக்கிறார். இதனிடையே சொந்த ஊர் திரும்பிய ராம் அங்கே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். உறவினர் வீட்டில் கோவிந்த் வளர்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில் கோவிந்தின் அத்தை ஒருவர் கேரளாவில் இருக்கும் தாயை சென்று பார்க்கும்படி கூறவே, உண்மையை அறிந்துகொண்ட கோவிந்த் கேரளா திரும்பியிருக்கிறார்.
கண்ணீர்
கருக்காச்சல் காவல்நிலையத்திற்கு சென்ற கோவிந்த் தனது நிலையை விளக்கியுள்ளார். இதை கேட்ட அதிகாரிகள் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் ஒருவர் மூலமாக கீதாவிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். 25 வருடங்கள் கழித்து தனது மகன் தன்னை தேடி வந்ததை கேட்டு பூரிப்படைந்த கீதா நேரடியாக காவல்நிலையத்திற்கு வந்து கோவிந்தை கட்டியணைத்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"இத்தனை ஆண்டுகாலமாக எனது மகனை மீண்டும் பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். ஓணம் திருநாளுக்கு எனக்கு கிடைத்த பரிசு இது. மரணமடைவதற்கு முன்னர் ஒருமுறையாவது மகனை பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். இதற்காக நான் வேண்டாத தெய்வம் இல்லை" என கசிந்த கண்களுடன் கூறினார். தற்போது ஆட்டோ ஓட்டிவரும் கீதா, தன்னுடைய பலநாள் காத்திருப்பு பூர்த்தியாகிவிட்டதாக தெரிவித்தது அங்கிருந்த அதிகாரிகளை கண்கலங்க செய்திருக்கிறது.
தங்களை தேடவேண்டாம் என ராம் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்துடன் இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்திருக்கிறார் கீதா. ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகள் மட்டுமே கோவிந்துக்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் தனது தாயை கண்டுபிடிக்கும் பணியில் அவர் வெற்றியடைந்திருக்கிறார். இந்நிலையில், இனி தனது தாயுடன் வசிக்க இருப்பதாக கோவிந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
