"அவன் மீண்டு வரணும்..அதுபோதும்".. மகனுடைய சிகிச்சைக்காக தந்தை எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் தனது மகனை பிழைக்க வைக்க தன்னுடைய குடலின் ஒரு பகுதியை நன்கொடையாக அளித்திருக்கிறார் தந்தை ஒருவர். அதிர்ஷ்டவசமாக தற்போது அவருடைய மகன் தற்போது நலமடைந்து வருகிறார்.
தந்தைகள் எப்போதும் செயல் வடிவமாகவே தங்களது பிணைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். அதனை மீண்டும் ஒருமுறை இந்த உலகிற்கு நிரூபித்திருக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த சூரஜ் பாப்ஷா எனும் தந்தை. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள ஹூக்ளி பகுதியை சேர்ந்தவர் சூரஜ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் 5 மாதங்களுக்கு முன்பாக சூரஜின் மகனுக்கு திடீரென கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கின்றன. இதனால் அதிர்ந்துபோன சூரஜ் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்துச் சென்றிருக்கிறார்.
அதிர்ச்சி
நீண்ட பரிசோதனைக்கு பிறகு சூரஜின் மகனுக்கு biliary artesia என்னும் குடல்நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது. பிலியரி அட்ரேசியா என்பது கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு பித்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு ஆகும். கல்லீரலின் உள்ளே அல்லது வெளியே உள்ள குழாய்கள் சாதாரணமாக உருவாகாதபோது இந்த நிலை ஏற்படுகிறது. இந்த குறைபாடு தோன்றுவதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ஹூக்ளி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், சூரஜை உடனடியாக பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவனைக்கு தனது மகனை அழைத்துச் செல்லும்படி தெரிவித்திருக்கின்றனர்.
சிகிச்சை
அதன்படி, சூரஜ் தனது மகனை அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கு தனது குடலின் ஒருபகுதியை தானமாக அளிக்க வேண்டும் எனவும் சூரஜ்-இடம் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு உடனடியாக சம்மதித்திருக்கிறார் சூரஜ். இதனையடுத்து 8 மணி நேர அறுவை சிகிச்சை மூலமாக சூரஜ் -ன் குடல் பகுதி எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவருடைய மகனுக்கு நடைபெற்ற 12 மணி நேர அறுவை சிகிச்சை வெற்றி பெற்றிருக்கிறது.
நெகிழ்ச்சி
அதன்பின்னர் 3 வாரம் கழித்து சூரஜின் மகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவமனை செலவுக்காக 15 லட்ச ரூபாய் திரட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது சொந்த ஊரில் இருந்த தன்னுடைய நிலத்தை விற்று பணம் திரட்டியிருக்கிறார் சூரஜ். இதுபற்றி அவர் பேசுகையில்,"என்னிடம் இருந்த 10 கத நிலங்களையும் நான் விற்றுவிட்டேன். (ஒரு கத என்பது 720 சதுர அடிகள் ஆகும்). இருப்பினும் எனது மகன் மீண்டு வந்தால் போதும் என நினைத்தேன். அதுவே எனக்கு முக்கியம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.