"சப்பாத்தி சாப்பிட்டுட்டு இருந்தான்.. அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தான்!".. மனைவி, பெற்றோர் கண்முன்னே இன்ஜினியர் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகி 60 நாட்கள் கூட ஆகாத நிலையில் சேலத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இளைஞரொருவர் அவருடைய மனைவி மற்றும் பெற்றோர் கண் முன்னாலேயே போதை கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டிபுரத்தை சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு வரும் வழியில் மூங்கில் குச்சியால் அருகில் இருப்பவர்களை தாக்கிக் கொண்டே வந்ததாகவும், சர்க்கரைசெட்டிபட்டி அருகே வந்த இவர்கள், அக்கிராமத்தின் சாலை ஓரமாக நின்றிருந்தவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பைக்கில் வந்தவர்கள் இரண்டு பேரை அந்த கிராமத்தினர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக பிடித்து வைத்துள்ளனர். ஆனால் தப்பித்துச் சென்ற சிலர் தங்கள் ஊருக்கு சென்று ஆட்களை கூட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஊருக்குள் வந்த அந்த இளைஞர்கள் சாலையோரத்தில் இருந்த வீடுகளின் மீது கற்களை வீசியதாகவும் அந்த சமயத்தில் அங்கிருந்த விஷ்ணுப்பிரியன் என்கிற சாஃப்ட்வேர் இளைஞர் ஒருவரின் வீட்டிலிருந்து அவரது அம்மாவும் அவரது தம்பி நவீன் என்பவரும் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது நவீனைப் பிடித்து தலை மற்றும் கை, கால்களில் அந்த இளைஞர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதைப் பார்த்ததும் அலறிய நவீனின் அம்மாவின் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்ணுப்பிரியன் வெளியே வந்திருக்கிறார். அவர் வெளியே வந்ததும் அவரது மனைவியும் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த விஷ்ணுப்பிரியன், தனது தம்பியை அந்த இளைஞர்கள் அடிப்பதை பார்த்ததும் பதறிப்போய் அவர்களை தடுத்து தன் அம்மா, தம்பியை மீட்டதோடு, வீட்டின் கேட்டை பூட்ட முயன்றதாகவும், ஆனால் அப்போது, அவரை வெளியே இழுத்து அவரது மனைவி மற்றும் பெற்றோரின் கண்முன்னே குத்திக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் விஷ்ணுபிரியனை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சாஃப்ட்வேர் இன்ஜினியரான விஷ்ணுப்பிரியன் திருமணமாகி 60 நாட்கள் கூட ஆகாத நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டுக்கு வந்திருந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டதாகவும், அமைதியான அந்த குடும்பத்தில் இப்படியான துக்கம் நடந்துவிட்டது என்றும் விஷ்ணுப்பிரியனின் பெரியப்பா கண்ணீர் மல்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.