சென்னை, மதுரை உட்பட... 5 மாநகராட்சிகளில் முழு 'ஊரடங்கு'... தமிழக முதல்வர் உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26.04.2020 காலை 6 மணி முதல் 29.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும். சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 26.04.2020 முதல் 28.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்,'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எந்தெந்த துறைகளுக்கு விதிவிலக்கு?
*மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறைகளும் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
*இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM Center) வழக்கம் போல் செயல்படும்.
*மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை. மேற்கண்ட பணிகள் தவிர, பிற பணிகளுக்கு முழுயான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.
*மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகள் தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும். இக்காலத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் (Containment Zones) கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும்.
*தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.
*கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்
*உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.