‘நைட் எல்லாம் சூறாவளி காத்து மழை’.. விடிஞ்சதும் தோட்டத்தை பார்க்க போன +2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எடப்பாடி அருகே தோட்டத்துக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள வெள்ளரி கிராமம் கரும்பாறை காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் லோகேஸ்வரன் (17). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டிற்கு அருகே உள்ள தோட்ட வேலைகளை கவனத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சில பகுதியில் மரங்கள் சாய்ந்தன.
இதனால் தங்களது தோட்டத்திலும் சூறாவளி காற்றால் சேதம் ஏற்பட்டிருக்குமோ என லோகேஸ்வரன் காலையில் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் மின்சார கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதைக் கவனிக்காத லோகேஸ்வரன் தெரியாமல் அதில் காலை வைத்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு லோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டத்துக்கு சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
