'எனக்கு இப்போ குடிச்சே ஆகணும், இல்லன்னா' ... கிணற்றிற்குள் குதித்து அடம்பிடித்த நபர் ... இறுதியில் நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆவடி அருகே மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், மது வேண்டும் என அடம்பிடித்து கிணற்றிற்குள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான மக்கள் பலர் பல்வேறு விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னதாக வார்னிஷில் எலுமிச்சைப்பழம் கலந்து குடித்த நண்பர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அதே போல ஷேவிங் லோஷனை குடித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னை ஆவடி அருகே மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், தனக்கு மது வேண்டுமென அடம்பிடித்து கிணற்றிற்குள் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மது கிடைத்தால் தான் மேலே வருவேன். இல்லையென்றால் கிணற்றிற்குள் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார். அங்கிருந்த மக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி சமாதானப்படுத்த முயற்சித்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கிணற்றிற்குள் மூன்று அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
பிறகு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளியை கிணற்றிற்குள் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் பேச்சுக்கும் சமரசம் ஆகாத தொழிலாளியை சில மணி நேரத்திற்கு பின்னரே கிணற்றிற்குள் இருந்து மீட்புப்படையினர் மீட்டனர். கிட்டத்தட்ட இரவு நான்கு மணி நேரம் வரை தொழிலாளியின் போராட்டம் நிகழ்ந்தது.
மது வேண்டி அடம்பிடித்து கிணற்றிற்குள் தொழிலாளி குதித்த சம்பவம் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
