வீட்டு கேட்டில் இப்படி ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருக்கா.. அப்போ உடனே போலீசாரிடம் சொல்லிடுங்க.. நூதன முறையில் நடந்த துணிகரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டின் வெளிப்புற கேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்னகர் அடுத்த நியூ செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமன் (வயது 33). இவர் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வனிதா. இவர்கள் கடந்த 8-ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்துக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டு முன்பக்க கேட்டின் பூட்டு உடைந்து கிடந்தது. மேலும் வீட்டுக் கதவும் திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வேகமாக வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது பீரோவில் இருந்த இருந்த 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிக்கொலுசு, மடிக்கணினி, 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோயுள்ளது தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொள்ளை நடந்த லெட்சுமன் வீட்டின் முன்புறம் உள்ள இரும்புகேட்டில் சிறிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள வீட்டில் ஒருவேளை ஆட்கள் இருந்தால் இரும்பு கேட்டை திறக்கும்போது, இரு கதவுகளுடன் இணைத்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் கிழிந்துவிடும். இதன்மூலம் அந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் பல நாட்களாக ஸ்டிக்கர் கிழியாமல் இருந்தால் அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதனால் பூட்டி இருக்கும் வீடுகளின் முன்பு சந்தேகப்படும்படியாக ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தாலோ, குறியீடு இருந்தாலோ காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | பைக் விலை ரூ.71,000.. ஆனா நம்பர் ப்ளேட் ரூ. 15.4 லட்சம்.. அப்படி என்ன ஸ்பெஷல் நம்பர்..? மிரள வைத்த நபர்..!

மற்ற செய்திகள்
