ரொம்ப கம்மி விலைக்கு பைக் இருக்கு, வேணுமா? ஃபேஸ்புக் நண்பன் போட்ட மாஸ்டர் பிளான்.. திடீர்னு கழுத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கி.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பத்தூர்: கோயம்பத்தூரில் பைக் வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து மோசடி செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூல் மூலம் நண்பர்களாகி ஏமாற்றும் வேலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு மீண்டும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது கோவையை சேர்ந்த இளைஞர்களின் கதை.
மலிவான விலையில் பைக்:
கோயம்பத்தூர் மாவட்டம் அடுத்த கொண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான சுரேஷ்குமார். சுரேஷ்குமாரும் சென்னையை சேர்ந்த 36 வயதுடைய ஹரி என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பராகி சில மாதங்கள் பழகி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், சுரேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட ஹரி, 'திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியில் மலிவான விலையில் இருசக்கர வாகனம் விற்பனைக்கு உள்ளது, தேவை என்றால் வாங்கிக்கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளார்.
தைல மர காட்டில் தான் பைக் உள்ளது:
சுரேஷ் குமாரும் இதனை நம்பி அவரின் நண்பர் 34 வயதுடைய சங்கர் (34) என்பவருடன், கடந்த வெள்ளிக்கிழமை கவரப்பேட்டை வந்துள்ளார். அங்கு மூவரும் சந்தித்து கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஹரி, 'கவரப்பேட்டை அடுத்த கண்ணூர் தைல மர காட்டில் தான் பைக் இருக்கிறது. அங்கு செல்வோம் வாருங்கள்' என இருவரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
வாக்குவாதம்:
தைல மர காட்டிற்கு சென்றபோது, யாரும் இல்லாத இடத்தில் ஒரு 5 பேர் மட்டும் இருந்துள்ளனர். அதோடு, அவர்களில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருந்துள்ளார். இதனை பார்த்த சுரேஷும், அவரது நண்பர் சங்கரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், ஆளில்லாத அந்த இடத்தில் பைக்கும் இல்லை. உடனே, பணம் கொண்டு சென்ற சங்கர் மற்றும் சுரேஷ், ஹரியிடம் இதுபற்றி கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, நாட்டு துப்பாக்கியை காட்டி ஹரி உள்ளிட்ட 6 பேரும் மிரட்டி, இருவரிடமும் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தனர்.
போலீசில் புகார்:
அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூகுள் பே மூலம் அவர்களது உறவினர்களிடம் இருந்து 15 ஆயிரம் பணத்தையும் வாங்கி கொண்டு 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து சுரேஷ்குமாரும், சங்கரும் ஒரு ஆட்டோவில் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறி புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். பேஸ்புக் நண்பரால் ஏமாந்து துப்பாக்கி முனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரோட்டோரம் கிடந்த சூட்கேஸ்.. காலையில் வாக்கிங் போக வந்தவர்கள் கண்ட நடுங்க வைக்கும் காட்சி