"மனிதநேயத்துக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்".. பிரதமர் மோடி பாராட்டிய பாகிஸ்தான் பெண்..யார் இவர்?
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக நல ஆர்வலரான பில்கிஸ் எதி அவர்களின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் எதி
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பாண்ட்வா பகுதியில் பிறந்தவர் பில்கிஸ் எதி. தன்னுடைய சிறுவயது முதலே கஷ்டத்தில் உழலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பில்கிஸ், எதி அறக்கட்டளையில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அறக்கட்டளையின் நிறுவனரான அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.
தொட்டில் குழந்தை திட்டம்
உலகம் முழுவதும் உள்ள மக்களை நேசிக்கும் மனம் கொண்ட பில்கிஸ் தொட்டில் குழந்தைத் திட்டத்தை துவங்கினார். அதன் மூலம் குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படும் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த திட்டத்தின் அடிப்படையில் அறக்கட்டளையின் வெளியே 300க்கும் மேற்பட்ட தொட்டில்களை அவர் நிறுவினார். பல வறுமையில் வாடிய தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை அறக்கட்டளையை நம்பி அந்த தொட்டிலில் விட்டுவிட்டுச் சென்றனர். அந்த குழந்தைகளை தன்னுடைய குழந்தையாக வளர்த்து வந்தார் எதி.
கீதா
பாகிஸ்தானின் தெருக்களில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட இந்தியப் பெண் ஒருவரை பில்கிஸ் எதி கண்டறிந்து அவரை தன்னுடைய அறக்கட்டளையில் இணைத்துக்கொண்டார். கராச்சி மாகாணத்திலுள்ள எதி அறக்கட்டளைக்கு அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணிற்கு கீதா என பெயரிட்டார் பில்கிஸ். மேலும் கீதா இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகள் நடத்தவும் வசதிகளை செய்து கொடுத்தார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு கீதா இந்தியாவில் உள்ள தனது தாயுடன் இணைந்தார். இதற்கு பில்கிஸ் எடுத்த முயற்சிகள் அபரிமிதமானவை.
இது குறித்து ஒரு முறை பேசிய எதி "எனக்கு அது ரம்ஜான் போன்றது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறினார். சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது பெற்றவரான பில்கிஸ் நுரையீரல் தொற்று, நீரழிவு மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
மோடி இரங்கல்
பாகிஸ்தானைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரான எதியின் மரணத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "மனிதாபிமான பணிகளுக்கான பில்கிஸ் எதியின் வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பு உலகமெங்கிலும் உள்ள பல்வேறு மக்களின் வாழ்க்கையை சென்றடைந்து உள்ளது. இந்தியாவில் உள்ளவர்களும் அவரை அன்புடன் நினைவுகூர்கிறார்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன, மத பேதங்களை கடந்து அனைத்து மக்களையும் பரிபூரண அன்புடன் நேசித்த எதியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.