'கொள்ளையன் முருகனை மறக்க முடியுமா'?... 'கோடி கணக்கில் பணம், நடிகையுடன் தொடர்பு'... வாழ்க்கையை புரட்டி போட்ட எய்ட்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 28, 2020 04:35 PM

பிரபல கொள்ளையன் முருகனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை உட்பட பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முருகன் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Robber behind Lalitha Jewellery heist dies in jail due to HIV

திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் 1-ந் தேதி இந்த நகைக்கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், நகைக்கடைக்குள் இருந்த ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்திய அளவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குற்றவாளிகளைக் கைது செய்வது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். கொள்ளை சம்பவம் நடந்த சிறிது நாட்கள் கழித்து தமிழ்நாடு திருவாரூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

Robber behind Lalitha Jewellery heist dies in jail due to HIV

அப்போது அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மணிகண்டனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ நகைகளில், லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் டேக் ஓட்டப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த போலீசார் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து மணிகண்டனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

மணிகண்டன் திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் என்பவரின் கூட்டாளி என்பதும், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த முருகனையும், கூட்டாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தார்கள். இதை அறிந்த முருகன் இதற்கு மேல் தலைமறைவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து பெங்களூரு மோயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான முருகனின் அக்காள் கனகவள்ளியின் மகன் சுரேஷ், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Robber behind Lalitha Jewellery heist dies in jail due to HIV

இருவரையும் திருச்சி கோட்டை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தபோது, நகைகளைக் காவிரி ஆற்றங்கரையில் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தார்கள். இதையடுத்து அந்த நகைகளை போலீசார் மீட்ட நிலையில், கடந்த ஆண்டு (2019) திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள வங்கியில் 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போன சம்பவத்திலும் முருகன் கும்பலே ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பெங்களூருவில் பல இடங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் முருகன் மீது பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் பெங்களூரு போலீசார் முருகனைக் கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர்.

Robber behind Lalitha Jewellery heist dies in jail due to HIV

முருகன் தனது அக்காள் மகனை வைத்து திரைப்படம் எடுக்க முயற்சி செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகின. மேலும் பிரபல நடிகை ஒருவருக்கும், முருகன் கொள்ளையடித்த நகைகளைக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் பெங்களூருவில் முருகன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்ததால், முருகனால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் முருகனுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி.(எய்ட்ஸ்), சர்க்கரை நோய் உள்ளிட்ட சில நோய்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறையில் உள்ள மருத்துவமனையில் முருகனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மேலும் மோசமானதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு ஜெயநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகன் அங்குச் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் இறந்தார்.

Robber behind Lalitha Jewellery heist dies in jail due to HIV

இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று முருகனின் உடலைப் பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்ததும் முருகனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Robber behind Lalitha Jewellery heist dies in jail due to HIV | Tamil Nadu News.