“பையன் NEET-ல பாஸ் ஆயிட்டான்.. எப்படியாச்சும் டாக்டர் ஆக்குங்க ஐயா!”.. மெடிக்கல் சீட்டுக்கு ரூ.57 லட்சம் கொடுத்த தந்தை .. ‘பாதிரியாரும்’ கூட்டாளிகளும் செய்த ‘பலே’ காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு மாவட்டம் காரணை புதுச்சேரியைச் சேர்ந்த இன்ஜினியர் சீனிவாசன் என்பவரின் மகன் ஈஸ்வர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அவரை வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சீட் கேட்டுள்ளார் சீனிவாசன். ஆனால் தேர்வு மூலமே மாணவர்களை தேர்வு செய்வதாக கூறி, சிஎம்சி நிர்வாகம் சீட் தர மறுத்து விட்டதாக கூறப்பட்டதை அடுத்து சீனிவாசன் அப்பகுதி சிஎஸ்ஐ தேவாலய பாதிரியார் சாது சத்யராஜ் என்பவர் மூலம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் தேவகுமார் மற்றும் அவரது தம்பி அன்பு கிராண்டை சந்தித்துள்ளார்.

அவர்களோ 20 நாட்களுக்குள் 57 லட்சம் ரூபாய் கொடுத்தால் சீனிவாசனின் மகனுக்கு டாக்டர் சீட் கன்ஃபார்ம் என கூற, தன் மகனுக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சீனிவாசன் 3 தவணையாக வங்கிக்கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் அவர்களிடம் 57 லட்சம் ரூபாயை கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 2017 ஆம் ஆண்டு டாக்டர் சீட் வாங்கித் தராமல் இழுத்தடித்தனர். 2018 ஆம் ஆண்டு கண்டிப்பாக வாங்கி தருவதாக சீனிவாசனை நம்ப வைத்து உள்ளனர். ஆனால் 2018 ஆம் ஆண்டும் சீட் வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்ட சீனிவாசனிடம், 2019ஆம் ஆண்டு நிச்சயம் கிடைத்துவிடும் என்று சமாளித்து இழுத்தடித்தனர். ஆனால் அப்போதும் மருத்துவ சீட் வாங்கி கொடுக்கவில்லை என்பதால் சீனிவாசன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போதும் திருப்பித் தருவதாகச் சொல்லி இழுத்தடித்துள்ளார்கள். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன் பாதிரியார் சாது சத்யராஜை சந்தித்து அடிக்கடி தனது பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாதிரியார், தேவகுமார், அன்பு கிராண்ட் மூவரும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால் சீனிவாசனின் கதையை முடித்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காளிப்பாரிடம், பாதிரியார் உள்ளிட்ட 3 பேரின் மருத்துவ சீட்டு மோசடி குறித்து சீனிவாசன் புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுபற்றிய விசாரணையை முன்னெடுத்ததுடன் பாதிரியார் சாது சத்தியராஜ், தேவகுமார், அன்பு கிராண்ட் மூவரும் 57 லட்சம் ரூபாய் பணம் பெற்றதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் நம்பிக்கை மோசடி கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
