வீடு ‘வாடகைக்கு’ பார்ப்பதுபோல் வந்து அன்பாக பேசிய ‘டிப்டாப்’ லேடி.. நம்பி ‘முறுக்கு’ கொடுத்து உபசரித்த பாட்டி.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த டிப்டாப் பெண் ஒருவர் மிளகாய் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் அப்பகுதியில் மழலைகள் பள்ளியை நடத்தி வருகிறார். ரவிக்குமார் தனது வீடு ஒன்றை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் டிப்டாப் பெண் ஒருவர் வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல வந்துள்ளார். அந்த சமயம் ரவிக்குமாரின் தாயார் அம்பிகா (82 வயது) மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டை பிடித்துள்ளதாக கூறி பாட்டியிடம் அப்பெண் நீண்ட நேரமாக பேசியுள்ளார். அவரது கனிவான பேச்சை நம்பிய பாட்டி, வீட்டில் இருந்த முறுக்கு போன்ற திண்பண்டங்களை கொடுத்து உபசரித்துள்ளார். அப்போது தனது கணவரிடம் அட்வான்ஸ் பணத்தை கொண்டு வர சொல்லி இருப்பதாக கூறி அப்பெண் நீண்ட நேரமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.
அந்த சமயம் மதியம் உணவு சாப்பிடுவதற்காக ரவிக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடமும் வீட்டை பற்றி விசாரித்துவிட்டு அங்கிருந்து அப்பெண் கிளம்பியுள்ளார். இதனை அடுத்து மாலை 4 மணியளவில் பாட்டி தனியாக இருப்பதை அறிந்து மீண்டும் அப்பெண் வந்துள்ளார். மறுபடியும் நீண்ட நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த பாட்டி, அப்பெண்ணை நாளைக்கு வந்து வீட்டை பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடனே பையில் இருந்த மிளகாய் பொடியை பாட்டியின் முகத்தில் வீசிவிட்டு, அவரது 10 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார். முகத்தில் மிளகாய் பொடி இருந்தாலும் தைரியமாக தனது தங்க சங்கிலியை இறுக பற்றிக்கொண்டு பாட்டி கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்கு அப்பெண் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ரவிக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். டிப்டாப் உடையணிந்து வாடைக்கு வீடு பார்ப்பதுபோல் தனியாக இருந்த பாட்டியிடம் பெண் ஒருவர் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
