'சரணடைந்த பிறகு'... மிகவும் கவலைக்கிடமான உடல்நிலையில் 'சரவணபவன்' உரிமையாளர் ராஜகோபால்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 14, 2019 03:24 PM

சிறை தண்டனைக்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rajagopal is in critical condition after surrendered

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைசெய்யப்பட்ட வழக்கில் பிரபல உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு 2004 ஆம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் மீண்டும் ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முற்பட்டார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த தண்டனை மீண்டும் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. 

ஆனால் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கில் நீடித்த இழுபறியைத் தாண்டி ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தான் சரணடைவதற்கான காலநீட்டிப்பு அவகாசத்தை தரவேண்டும் என்று தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றமும் ராஜகோபாலுக்கு காலநீட்டிப்பு ஏதும் வழங்க முடியாது என்று சொல்லி உடனடியாக சரணடைய வேண்டும் என்று கட்டளையிட்டது.

அதன்படி கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே ராஜகோபால் சரணடைந்தார். இந்த சூழலில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய உறவினர்கள் அவரின் அருகிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #RAJAGOPAL #HOTEL #CASE #SUPREMECOURT #VERDICT