தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு.. 'நீதித்துறைக்கு கடும் அச்சுறுத்தல்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 20, 2019 05:33 PM
நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கவலை தெரிவித்துள்ளார்.
![chief justice of india says independence of judiciary under threat chief justice of india says independence of judiciary under threat](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/chief-justice-of-india-says-independence-of-judiciary-under-threat.jpeg)
உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, 'சுயநலமில்லாத என் சேவையில் இது போன்ற ஒரு குற்றச்சாட்டு நம்பமுடியாதவை. என் மீது புகார் கூறியுள்ள பெண் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்த சதிக்கு பின்னால் ஒரு பெரும் சக்தி உள்ளது. நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற அச்சுறுத்தல் இருந்தால் நீதித்துறைக்கு நல்லவர்கள் வர முடியாமல் போய்விடும்' என்று கூறியுள்ளார்.
'இது போன்ற குற்றச்சாட்டுக்கு தரம் தாழ்ந்து பதில் சொல்ல விரும்பவில்லை. 20 ஆண்டுகால நீதிபதி பணிக்கு இதுதான் எனக்கு கிடைத்த சான்று. பணம் விஷயத்தில் என்னை சிக்க வைக்க முடியாததால் இது போன்ற சூழ்ச்சி நடக்கிறது. அடுத்த வாரம் ஒரு முக்கிய வழக்கு விசாரிக்க வேண்டியுள்ள நிலையில் இது போன்று அச்சுறுத்தல் வருகிறது. என்னை சிலர் நிர்பந்தப்படுத்த முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக எனது சகோதரர்கள் மற்றும் மூத்த நீதிபதிகள் எனக்காக இல்லாமல் தன்னிச்சையாக முடிவு செய்யட்டும்' என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு பார் கவுன்சில் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த பார் கவுன்சில் உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதிக்கு ஆதரவாக நிற்பர் எனவும் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)