ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கு.. நீதிபதிகள் குழு விசாரணை எப்போது?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 24, 2019 10:50 AM
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் விவகாரத்தில், 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரிடம் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சிறப்பு அமர்வு கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, தம்மீதான புகார்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய சக்தி இருப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி பாப்டே தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். ரஞ்சன் கோகாய்க்கு பிறகு, அடுத்த நீதிபதியாக இருக்கும் பாப்டே, தனது விசாரணை குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரை இணைத்துள்ளார்.
இந்தக் குழுவினர், ரகசிய அறையில், தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக குற்றம்சாட்டியப் பெண்ணுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். இந்த விசாரணை வருகின்ற வெள்ளிக்கிழமை மதியம் துவங்குகிறது.
