‘இது எங்க சிப்ஸ்க்கான உருளைக் கிழங்கு ரகம்'.. புதிய நிபந்தனை விதித்த 'பிரபல நிறுவனம்'.. விவசாயிகள் கவலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 25, 2019 05:43 PM
லேஸ்-க்கு பயன்படுத்தப்படும் காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை, விவசாயிகள் பயிரிட்டதாக நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், பெப்ஸிகோ நிறுவனம் விவசாயிகளுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது.
பெப்ஸிகோ நிறுவனம் இந்தியாவில் லேஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயரில் உருளைக் கிழங்கு சிப்ஸ் விற்பனையைச் செய்து வருகிறது. இதற்காக லேஸ் நிறுவனம் அதன் சிப்ஸ்களுக்கு FL-2027 மற்றும் FC-5 ரக உருளைகிழங்குகளை பதிவுசெய்து பயன்படுத்தி வருவதாகவும், அதனைப் பிறர் பயிரிட உரிமை கிடையாது என்று பெப்ஸி நிறுவனம் குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 4 விவசாயிகளிடம் 1.05 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது நிலத்தில் விளையும் பயிர்களின் விதைகளைப் பதப்படுத்தி மீண்டும் அதைப் பயிர் செய்யத் தங்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளனர். இந்த வழக்கில் சிக்கியுள்ள விவசாயிகள், பெப்ஸிக்கு ஒப்பந்தமாகக் கூட உருளைக்கிழங்கு கொடுத்ததில்லை. பதிவு செய்யப்பட்ட பிராண்ட் விதைகளாக இல்லாதபட்சத்தில், எந்த விதையையும் கூட தாங்கள் பயன்படுத்த சட்டம் அனுமதி அளிக்கிறது என்று குமுறியுள்ளனர்.
உலக வர்த்தக அமைப்புக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இது போன்ற வழக்கு முதல்முறையாகும். இந்நிலையில் இந்த வழக்கு இன்று அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களது காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கு விதைகளை எங்களிடமிருந்து வாங்கி, பயிரிட்டு எங்களுக்கே விவசாயிகள் திருப்பி அளித்தால், வழக்கை வாபஸ் பெற்றுகொள்வதாக பெப்ஸிகோ நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து விசாரணை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.