ரஃபேல் வழக்கு: மத்திய அரசு கோரிக்கை.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 10, 2019 02:26 PM

'ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறு சீராய்வு மனுவை நிராகரிக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் கோரிக்கையை  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

supreme court rejects central government demands in rafale deal plea

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்தத்தில், முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்குகளில், கடந்த டிசம்பர் மாதம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இதனையடுத்து ரஃபேல் வழக்கில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ரஃபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக, பா.ஜ.க. அரசுமீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த நிலையில், அது தொடர்பான மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில், 'பத்திரிகைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தக் கூடாது' என்று மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது. மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 'ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், ஆவணங்கள்மீது விரிவான விசாரணை நடத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஃபேல் வழக்கில் இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன் காரணமாக, மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரஃபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #BJP #SUPREMECOURT #RAFALEDEAL #ARUNSHOURIE #REJECT