‘80 மணிநேர போராட்டம் தோல்வியில் முடிந்தது’.. ‘குழந்தை சுஜித் சடலமாக மீட்பு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 29, 2019 08:31 AM
மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சுஜித் எனும் 2 வயது குழந்தை தவறி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பலகட்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 80 அடிக்கும் கீழே சென்றது.
கயிறு கட்டி மீட்கும் முயற்சி பலனளிக்காமல் போகவே, ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி அதன்மூலம் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 4 நாட்களாக இரவு, பகலாக நடந்த மீட்புப் பணி கடினமான பாறைகளால் அவ்வப்போது தடைபட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் குழந்தை இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிகளவில் சிதைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் உடலை அழுகிய நிலையில் மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மீட்கும் முயற்சி பலனளிக்காமல் குழந்தை சுஜித் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.