குளத்துக்குள் பதுங்கி இருந்த ரவுடி.. பறந்து வந்த ‘ட்ரோன்’ கேமரா.. சினிமாவை விஞ்சும் சேஸிங்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குளத்திற்குள் பதுங்கி இருந்த ரவுடியை ட்ரோன் உதவியுடன் போலீசார் கைது செய்த பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனை அறிந்த சாகுல் ஹமீது திடீரென தலைமறைவானார். இதனை அடுத்து தென்காசி அருகே பச்சநாயக்கன்பொத்தை குளம் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஆடு மேய்க்க வரும் நபர்கள், குளிக்க வரும் பெண்களை சாகுல் ஹமீது மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சாகுல் ஹமீதை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் பச்சநாயக்கன்பொத்தை குளம் பகுதியில் உள்ள புதர்களில் ஓடி மறைந்து போக்கு காட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ், தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி, தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்படி சாகுல் ஹமீதை உடனடியாக கைது செய்ய ஆலோசனை மேற்கொண்டனர். இதனை அடுத்து ட்ரோன் கேமரா வசதியுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக்காவலர் முத்துராஜ், மாரியப்பன், குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் உடனடியாக பச்சநாயக்கன்பொத்தை பகுதிக்கு சென்றனர்.
ட்ரோன் கேமரா உதவியுடன் பச்சநாயக்கன்பொத்தை குளம் முழுவதும் தேடினர். அப்போது குளத்தின் நடுவே நீருக்குள் படர்ந்திருக்கும் செடிகளுக்கு மத்தியில் சாகுல் ஹமீது பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் எச்சரிக்கை செய்தனர். தான் மாட்டிக்கொண்டோம் என்பதை அறிந்த சாகுல் ஹமீது, ஆயுதங்களை கீழே போட்டு விட்டு போலீசாரிடம் சரணடைந்தார். சினிமா பாணியில் ட்ரோன் கேமரா வசதியுடன் ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.