'கண்டா வர சொல்லுங்க'... 'எம்.பி.யை காணவில்லை என்று முகநூலில் பதிவிட்ட நபர்'... இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.பி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்று முகநூலில் ஒருவர் பதிவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் அருகே நயினாரகரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ‘‘தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை, யாராவது கண்டால் எங்கள் கிராமத்துக்கு வரச்சொல்லுங்கள்” என்று முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாரின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து அந்த கிராமத்துக்குச் சென்று அந்த இளைஞரை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கினார். அப்போது அந்த இளைஞர், ‘‘எங்கள் ஊருக்கு பொது கழிவறையும் பேருந்து நிழற்குடையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதை இது வரை நீங்கள் செய்யாததால் இவ்வாறு பதிவிட்டேன் என்று கூறினார்.
இதைக் கேட்ட தனுஷ் குமார், ‘‘ கோரிக்கையை நிறைவேற்ற தயாராக உள்ளேன். கொரோனா காரணமாகத் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் தொகுதி முழுவதும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நிதி வந்ததும் உங்கள் ஊருக்கு பொதுக் கழிப்பிடமும், பேருந்து நிழற்குடையும் அமைத்துத் தருவேன்’ என வாக்குறுதி அளித்தார்.

மற்ற செய்திகள்
