தயவுசெஞ்சு பைக்கை எடுக்குமுன் இதை ‘செக்’ பண்ணுங்க.. நூலிழையில் உயிர்தப்பிய ‘மெக்கானிக்’.. உருக்கமான வேண்டுகோள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது நல்லபாம்பு கடித்து உயிருக்கு போராடி மீண்ட இளைஞர் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ணபூமி பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் முப்பிடாதி. இவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்தது போல இருந்துள்ளது. பூச்சியாக இருக்கும் என முப்பிடாதி அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளார்.
ஆனால் மீண்டும் ஏதோ கடித்ததுபோல் இருக்கவும், உடனே பைக்கை நிறுத்திவிட்டு பார்த்துள்ளார். அப்போது பைக்குக்குள் இருந்த நல்லபாம்பு மீண்டும் இருமுறை முப்பிடாதியை கொத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பைக்கை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். முப்பிடாதியின் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர், பைக்கில் இருந்த பாம்பை வெளியேற்ற முயன்றனர். ஆனால் பாம்பு பைக்கின் சீட்டுக்கு அடியில் சென்றதால், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் நல்லபாம்பை பிடித்து வனத்துக்குள் விட்டனர். இதற்கிடையே முப்பிடாதியை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த முப்பிடாதி தற்போது குணமடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தெரிவித்த முப்பிடாதி, ‘தற்போது மழைக்காலம் என்பதால் இருசக்கர வாகனங்களில் விஷப்பூச்சிகள் குடியேற வாய்ப்பு உள்ளது. அதனால் வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பின்னரே பயன்படுத்துங்கள். என் வாகனத்தில் பதுங்கியிருந்த நல்லபாம்பின் வால் பகுதி இருசக்கர வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சுற்றி இருந்துள்ளது. இதை நான் சரியாக கவனிக்கவில்லை.
வண்டியை ஓட்டும்போது அதன் வால் பகுதியில் அடிபட்டதால், அது என்னை கொத்தியுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் நான் உயிர்பிழைத்துக் கொண்டேன். அதனால் தயவுசெய்து இருசக்கர வாகனங்களை எடுக்கும் முன் நன்றாக சோதனை செய்து கொள்ளுங்கள்’ என முப்பிடாதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
