‘நாட்டு துப்பாக்கி, வெல்டிங் மெஷின்’.. ‘திருட்டு டாடா சுமோ’.. திருப்பூர் ஏடிஎம் கொள்ளையில் வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரிலில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் கூலிப்பாளையம் நான்கு சாலை அருகே பாங்க் ஆஃப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்தில் ஏடிஎம் மையமும் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழியாக சென்றவர்கள் ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் ஏடிஎம் மையத்தில் சோதனை செய்தனர். அப்போது ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இவை அனைத்தும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிடிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில், காங்கயம் துணை காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், டாடா சுமோ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திய காரை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், விஜயமங்கலத்தில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனே அந்த வாகனத்தின் எண்ணை வைத்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், ஹரியானா மாநிலம் மேவத் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் (24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38), காசிம்கான் (45) ஆகிய 6 பேரை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் குடோனில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த 6 பேரும் பெங்களூரில் இருந்து கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கண்டெய்னர் லாரியில் விஜயமங்கலம் வந்துள்ளனர்.
பின்னர் கண்டெய்னரை ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு ஏடிஎம் இயந்திரத்தைத் திருடுவதற்காகச் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோ காரை திருடிக் கொண்டு திருப்பூர் வந்துள்ளனர். அப்போது கூலிப்பாளையம் நான்கு சாலையில் உள்ள வங்கியில் காவலாளி இல்லாதது தெரிந்து, இந்த 6 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த பணத்தை மீட்ட போலீசார், அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள் மற்றும் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அந்த 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.