‘யுவராஜ் சிங் மீது போலீசார் FIR பதிவு’!.. கடந்த வருசம் சர்ச்சையான இன்ஸ்டாகிராம் ‘சேட்டிங்’ விவகாரம்.. பரபரப்பில் கிரிக்கெட் வட்டாரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீசார் FIR பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடந்த 2020 ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது சாதிய ரீதியாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இதுதொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் புகார் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதியுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது ஹிசார் நகர் காவல் நிலைய போலீசார் யுவராஜ் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அப்போது யுவராஜ் சிங் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ‘சாதி, நிறம், மதம் அல்லது இனம் என்ற பாகுபாட்டையும் நான் நம்பவில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். மக்களின் நலனுக்காக நான் எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். தொடர்ந்து அதில் செயல்படுவேன். ஒவ்வொரு மனிதரையும் நான் மதிக்கிறேன்.
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 5, 2020
நான் எனது நண்பர்களுடன் உரையாடியபோது நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இருப்பினும், ஒரு பொறுப்புள்ள இந்தியர் என்ற முறையில் நான் யாருடைய உணர்வுகளையும் எதேச்சையாக புண்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா மீதும், அதன் மக்கள் மீதும் நான் களங்கமற்ற அன்பை வைத்துள்ளேன்’ என யுவராஜ் தனது ட்விட்டர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
ரோஹித் சர்மாவும், யுவராஜ் சிங்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஜூன் மாதம் உரையாடினார்கள். அப்போது யுவராஜ் சிங், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்வை குறிப்பிட்டு சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
