‘சார் கிரெடிட் கார்டுக்கு போனஸ் பாயிண்ட் தர்றோம்’!.. ஆசை வார்த்தைகள் கூறி வரும் மர்ம போன் கால்ஸ்.. சென்னையில் நடந்த நூதன கொள்ளை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக கூறி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டை, கொய்யாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வரபிரசாத். கடந்த 18ம் தேதி செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர், தான் வங்கி மேலாளர் என்றும், தங்களின் கிரெடிட் கார்டுகளின் விபரங்களை கூறினால் போனஸ் பாயிண்ட் தருவதாகவும் வரபிரசாத்திடம் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை உண்மையென நம்பிய வரபிரசாத் தான் வைத்துள்ள நான்கு கிரெடிட் கார்டுகளின் விபரங்களையும், OTP எண்ணையும் பகிர்ந்துள்ளார். உடனே மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்த சிறிது நேரத்தில் வரபிரசாதின் நான்கு கிரெடிட் கார்டுகளின் வங்கி கணக்கிலிருந்து மொத்தமாக ரூ. 87,631 ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் எடுக்கப்படுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வரபிரசாத், உடனே திருவல்லிகேணி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அடையாளம் தெரியாத நபர் வரபிரசாத்தின் கிரெடிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் Paytm மற்றும் Mobikwik-ல் பண பரிவர்த்தனை செய்துள்ளது தெரியவந்தது. உடனே, திருவல்லிகேணி சைபர் கிரைம் போலீசார், இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு, வரபிரசாத்தின் பணத்தை மீள திருப்பி கொடுக்கும்படி விதிகளுக்குட்பட்டு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.
போலீசாரின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், வங்கி நிர்வாகத்தினர் வரபிரசாத்தின் வங்கி கணக்கிற்கு பணம் ரூ.57,081 மீள திரும்ப செலுத்தினர். மேலும் மீதமுள்ள பணத்தை மீட்க திருவல்லிகேணி சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக கூறி சென்னையில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
