விருந்தாளி போல் திருமணப் ‘பத்திரிக்கை’ கொடுக்க வரும் கும்பல்.. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான் டார்கெட்.. பதற வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் திருமணப் பத்திரிக்கை கொடுப்பதுபோல சென்று கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. கோழி வியாபாரியான இவர், கடந்த வாரம் மனைவியுடன் வெளியூர் சென்றிருந்திருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 லட்சம் ரூபாயைத் திருடிச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த மற்றொரு பீரோவை திறக்க முயன்று தோல்வியடைந்ததால் அதை உடைக்காமல் தப்பியோடியுள்ளனர். இதனால் அதில் இருந்த தங்க நகைகள் தப்பின.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கருப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மோகனூர் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை இந்தக் கும்பல் குறி வைத்துள்ளது. இவர்களில் ஒருவர் மருந்து விற்பனைப் பிரதிநிதி போல நடித்து ஒவ்வொரு வீடாக சென்று நோட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து மற்றொரு நபர் சரக்கு டெலிவரி பாய் போல நடித்து மீண்டும் அதை உறுதி செய்து கொள்ளுவார்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் பெண் தனிமையில் இருக்கும் நேரம் பார்த்து திருமணப் பத்திரிகை வைப்பது போல அந்த வீட்டிற்குள் நுழைவார்கள். அந்தப் பெண் திகைத்து நீங்கள் யார்? என விசாரிப்பதற்குள் கத்தியைக் காட்டி மிரட்டி அப்பெண்ணைக் கட்டிப் போட்டு வாயில் டேப் சுற்றி நகை, பணத்தைக் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டு வந்த, மோகனூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (32), சரண்குமார் (30), ஓவியம் பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (32) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
