‘கையில காசு இல்ல வீட்டுக்குபோய் தரேன்’!.. நடுரோட்டில் பேருந்தின் முன் தர்ணா.. பயணிகளை கடுப்பாக்கிய பூ வியாபாரி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடனுக்கு டிக்கெட் கேட்டு பூ வியாபாரி ஒருவர் பேருந்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த அயனாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். பூசாரியான இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திருச்சி பூ மார்கெட்டில் 500 ரூபாய்க்கு பூ வாங்கிவிட்டு தனியார் பேருந்து ஒன்றில் ஊருக்கு திரும்பியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முருகன் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனை அடுத்து பயணிகளுக்கு வரிசையாக டிக்கெட் கொடுத்து வந்த நடத்துனர், முருகனிடம் டிக்கெட் எடுக்க கேட்டுள்ளார். அதற்கு, தற்போது தன்னிடம் பணம் இல்லை, ஊருக்கு போய் தருகிறேன் என கூறி கடனுக்கு முருகன் டிக்கெட் கேட்டுள்ளார். இதனால் நடத்துனருக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் பகுதியில் பேருந்தை நிறுத்தி, முருகனை பேருந்திலிருந்து நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு பேருந்தின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கு பணியில் இருந்த லால்குடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் கவனித்துள்ளார்.
உடனே அங்கு சென்று முருகனை சமாதானம் செய்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணத்தை நடத்துனரிடம் கொடுத்து முருகனுக்கு டிக்கெட் வாங்கி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார். ஆனாலும், தொடர்ந்து பேருந்துக்குள் நடத்துனரை தகாத வார்த்தைகளால் முருகன் திட்டிக்கொண்டே வந்துள்ளார். இதனால் நொந்துபோன பயணிகள், அவரை கீழே இறக்கி விடுமாறு கேட்டுள்ளனர்.
இதனால் மீண்டும் அவரை பேருந்தை விட்டு கீழே இறக்கியுள்ளனர். ஆத்திரம் தீராத முருகன் தொடர்ந்து அட்டகாசம் செய்துள்ளார். இதனை பொறுமையாக கையாண்ட காவல் ஆய்வாளர் பழனியம்மாள், முருகனுக்கு 50 ரூபாய் கொடுத்து வேறொரு பேருந்தில் செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.