‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னையில் இருந்து 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெற்று, நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது 89 முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், உழவன் விரைவு, சோழன் விரைவு ரயில்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூரிலிருந்து மயிலாடுமுறை செல்லும் விரைவு ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில்
பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது. தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன, வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். அதை யாரும் மின்வெட்டு என்று நினைக்க வேண்டாம். தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகளவு மழை பெய்யக் கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன, 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினாலும், எந்த இடங்களில் புயல் கரையை கடந்தாலும் மின் துறை சமாளிக்க தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
