‘பல்சர் பைக்கில் வந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!’.. விபத்துக்குள்ளான பைக் மீது மோதிய அரசுப்பேருந்தால் ‘அடுத்து’ நடந்த பதறவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே நடந்த சாலை விபத்தில், நண்பருடன் பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். அத்துடன் ,விபத்துக்குள்ளான பைக் மீது, அரசு பஸ் மோதி இழுத்துச் சென்றதால், பஸ்ஸின் பகுதி தீப்பிடித்து எரிந்து சேதமானது.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த பாரிவள்ளல் என்கிற 30 வயதான நபரும், இவரது நண்பர், ஆம்பூரைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற 26 வயதானவரும், பல்சர் பைக்கில் பெங்களூருக்கு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பர்கூர் அருகே, பூமாலை நகர் பகுதியில், நள்ளிரவில் சென்டர் மீடியனில் பைக் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டுள்ளனர். இதில், பாரிவள்ளல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சமயத்தில், வேலுாரில் இருந்து, ஓசூர் நோக்கி வந்த அரசு பஸ், சாலையில் விபத்துக்குள்ளாகி இருந்த பைக் மீது மோதி, 30 மீட்டர் துாரம் வரை இழுத்துச் சென்றதால், பைக்கின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்தது. இதனால் அந்த , பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்தது. சாமர்த்தியமாக, அந்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணியரை கீழே இறக்கி விட்டதை அடுத்து, அங்கு வந்த, பர்கூர் தீயணைப்பு துறையினர், பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ்சின் முன்பகுதியும் மற்றும் பைக் முற்றிலுமாகவும் எரிந்து நாசமாகின.