'கழுத்தை நெரிக்கும் கந்துவட்டி!!'... 'இதுதான் தீர்வா?'... 'கதறும் உறவினர்கள்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 17, 2020 06:24 PM

கந்துவட்டி கொடுமையால் அவமானம் தாங்காமல், கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Parents commit suicide due to financial problems in Nellai

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர், சந்தானம். அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஆரோக்கியம் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான ஆரோக்கியம், தனியார் கான்ட்ராக்ட் தொழில் மற்றும் பங்குச் சந்தை முதலீடு செய்துவந்துள்ளார்.

இந்நிலையில், ஆரோக்கியத்தின் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டதால், கந்து வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படவே, கந்துவட்டிக்காரர் அவர்களை தரக்குறைவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன், அவர்களது வீட்டையும் எழுதி வாங்கியுள்ளார். மேலும், கடன் கொடுத்த மற்றவர்களும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, ஆரோக்கியம் திருமணம் செய்ய இருந்த பெண் வீட்டாரும், திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர்.

இவையனைத்தையும் எண்ணி மனமுடைந்த ஆரோக்கியம் குடும்பத்தினர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். உயிருக்குப் போராடும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தானமும், அவர் மனைவி லட்சுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆரோக்கியம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவர்கள் உறவினர்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #CRIME #PARENTS #USURYINTEREST