‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jan 14, 2020 03:59 PM
ஆன்லைனில் தேடி பாம்பு பிடிப்பவருக்கு ஃபோன் செய்தவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவை அடுத்த டோங்கிரி பகுதியைச் சேர்ந்த குர்பான் மாலிக் (29) என்பவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கடையில் இருந்தபோது மாலிக்கிற்கு போன் செய்த அவருடைய சகோதரி வீட்டின் சமையலறைக்குள் பாம்பு புகுந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து பதறிப்போன அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார். ஆனால் அங்கு பாம்பு எதுவும் இல்லாமல் போக அவர் மீண்டும் கடைக்குத் திரும்பியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு ஃபோன் செய்த சகோதரி மீண்டும் வீட்டிற்குள் பாம்பைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். அதனால் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற மாலிக் அரை மணி நேரமாகத் தேடியும் பாம்பு கிடைக்காததால் கடைக்குத் திரும்பியுள்ளார். ஆனாலும் பயத்தால் அவருடைய சகோதரி பாம்பு பிடிப்பவர்கள் யாரையாவது கூப்பிடுமாறு கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆன்லைனில் பாம்பு பிடிப்பவர்களைத் தேடிய மாலிக்கிற்கு ஒருவருடைய செல்ஃபோன் எண் கிடைத்துள்ளது. அந்த எண்ணில் மாலிக்குடன் பேசியவர் சில நிமிடங்களில் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார் எனக் கூறியுள்ளார். அதேபோல சில நிமிடங்கள் கழித்து மாலிக்கிற்கு ஒரு ஃபோன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், “பாம்பு பிடிக்கத் தயார். முதலில் 10 ரூபாயை அதற்காக ஆன்லைனில் கட்டுங்கள்” எனக் கூறியுள்ளார்.
முதலில் பாம்பைப் பிடியுங்கள், நேரில் பணம் தருகிறேன் என மாலிக் எவ்வளவு கூறியும் அந்த நபர் கேட்காததால் வேறு வழியின்றி அவர் அனுப்பிய லிங்கில் தன் அக்கவுண்ட் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். பின்னர் அடுத்த 2 மணி நேரங்களில் மாலிக்குடைய அக்கவுண்டிலிருந்து அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. 2 நிமிடங்களில் மொத்தமாக 35,700 ரூபாய் எடுக்கப்பட, பதறிப்போன மாலிக் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.