இளைஞர் கொலையில் ‘திடீர்’ திருப்பம்... ‘நிச்சயித்த’ பெண்ணால் நேர்ந்த ‘பயங்கரம்’... வெளியான ‘அதிரவைக்கும்’ காரணம்...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jan 11, 2020 10:16 PM
பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள குளம் ஒன்றிலிருந்து கடந்த வாரம் இளைஞர் ஒருவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் பர்விந்தர் சிங் (25) என்பதும், அவருக்கு வரும் 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. பர்விந்தர் சிங் தலையிலும், உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்துகிடந்ததை அடுத்து, இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், பர்விந்தர் சிங்கிற்கு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்த பிரேம் குமாரி என்ற பெண்ணே அவரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “பர்விந்தர் சிங், பிரேம் குமாரி இருவருடைய விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பாக திடீரென பிரேம் குமாரி அவருடைய தோழியின் சகோதரனை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருக்கும் பர்விந்தர் சிங்கை கொலை செய்யத் திட்டமிட்ட பிரேம் குமாரி, அதற்காக ரூ 7 லட்சம் விலைபேசி கூலிப்படை ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் திட்டமிட்டபடி, பர்விந்தரை மர்தான் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த அவருடைய காதலரும், கூலிப்படையினரும் சேர்ந்து பர்விந்தரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரேம் குமாரியைக் கைது செய்துள்ள போலீசார் இதில் தொடர்புடைய கூலிப்படையினரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.